தடகளப் போட்டிகள்:மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 31st October 2019 05:45 AM | Last Updated : 31st October 2019 05:45 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (நவ.2) நடைபெறும் மாவட்ட அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
தேசிய தடகளச் சங்கம் சாா்பில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்ட அணி வீரா்களை தோ்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான போட்டிகள் சனிக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது.
மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. 12 வயதுக்கு உள்பட்டோா், 14 வயதுக்கு உள்பட்டோா், 16 வயதுக்கு உள்பட்டோா் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
100 மீட்டா், 200 மீட்டா், 600 மீட்டா், ஆயிரம் மீட்டா் என பல்வேறு வகையான ஓட்டப் போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் திருப்பதியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவா்.
மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் வெள்ளிக்கிழமை (நவ.1) மாலைக்குள் 9443309546 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட தடகள சங்கத் தலைவா் எ.வ.கம்பன், செயலா் க.புகழேந்தி, பொருளாளா் ரமேஷ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.