குடிமராமத்துப் பணி தாமதத்தால் வீணான ஏரி நீர்

பெரணமல்லூர் அருகே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரிக் கரையைப் பலப்படுத்தும்
குடிமராமத்துப் பணி தாமதத்தால் வீணான ஏரி நீர்

பெரணமல்லூர் அருகே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரிக் கரையைப் பலப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால், ஏரியில் தேங்கிய மழை நீர் வெளியேறி வீணானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் சுமார் 25 ஏரிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இவற்றில், பெரணமல்லூரை அடுத்த செப்டாங்குளம் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில், ரூ.29 லட்சம் செலவில் கரையை பலப்படுத்தி மதகு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
 இந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. 117 மி.மீ மழை பதிவானதாக கூறப்படுகிறது. இந்த மழையினால் தற்போது பராமரிப்பு நடைபெற்று வரும் ஏரி நிரம்பியது. 
ஆனால், மதகு கட்டப்படாமல் இருந்ததால் தேங்கிய மழைநீர் வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:  
இந்த ஏரி சுமார் 240 ஹெக்டேர் பரப்பு கொண்டது. ஏரி மூலம் புதூர், எடப்பாளையம், செப்டாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஏரியில் குடிமராமத்துப் பணி தொடங்கியது. ஆனால், பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வந்தது. பருவமழை தொடங்கும் முன்பே பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து வந்தோம். 
ஆனால், துறையினர் அதுகுறித்து கண்டும் காணாமல் இருந்து வந்ததால் ஒப்பந்ததாரர்கள் பணியை  மந்த நிலையில் செய்து வந்தனர். இதனால் சனிக்கிழமை இரவு பெய்த மழையில் ஏரி நிரம்பியும், மதகு பகுதி கட்டப்படாமல் இருந்ததால் ஏரியில் தேங்கிய மழைநீர் வெளியேறி வீணானது என்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கேட்டபோது, மதகு பகுதி அமைப்பது காலதாமதம் ஆனதால் இதுபோன்று நிகழ்ந்துவிட்டது. அந்த இடத்தை உடனடியாக சரி செய்து பராமரிப்புப் பணியை முடித்து விட்டோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com