கிராம மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர்
By DIN | Published On : 19th September 2019 02:03 AM | Last Updated : 19th September 2019 02:03 AM | அ+அ அ- |

செங்கம் அருகே வளையாம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மீரா பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு கிராமங்களில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் அங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்திருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து, கொசு கடித்து சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்தக் கிராமத்தில் பொதுமக்களை பரிசோதித்து காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மீரா வளையாம்பட்டு கிராமத்துக்கு புதன்கிழமை வருகை தந்து காய்ச்சல் உள்ளவர்களை பார்வையிட்டார்.
மேலும், வீடு வீடாகச் சென்று மழைநீர், கழிவுநீர் தேங்கியுள்ளதா எனப் பார்வையிட்டு உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், கிராமத்தில் உள்ள அனைவரும் மழை நேரத்தில் நிலவேம்புக் குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என தெரிவித்து பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.