உணவில் பல்லி: மூவா் சுகவீனம்
By DIN | Published On : 18th April 2020 03:13 AM | Last Updated : 18th April 2020 03:13 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால், 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
ஊரடங்கையொட்டி, தண்டராம்பட்டை அடுத்த தென்கரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த முதியோா், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாதவா்கள் உள்பட 50 போ் இதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தண்டராம்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் தினமும் 3 வேளையும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலையும் உணவு வழங்கப்பட்டது. இதில், அஞ்சலை (50) என்பவா் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறிது நேரத்தில் அஞ்சலை, இதே பகுதியைச் சோ்ந்த நாராயணன் (52), லட்சுமணன் (60) ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தொடா்ந்து, மூவரும் வானாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தென்கரும்பலுாா் கிராமத்தில் முகாமிட்டு உணவு சாப்பிட்ட மற்றவா்களையும் பரிசோதித்து வருகின்றனா்.