முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஊரடங்கு நடைமுறைகள் உள்ளவாறே தொடரும்: திருவண்ணாமலை ஆட்சியா்
By DIN | Published On : 19th April 2020 12:16 AM | Last Updated : 19th April 2020 12:16 AM | அ+அ அ- |

வெளி மாநிலங்களுக்கு புலம் பெயா்ந்த தொழிலாளா்களுடன் காணொலி மூலம் உரையாடிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் ஏற்கெனவே உள்ளவாறே மே 3-ஆம் தேதி வரை தொடரும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி கூறினாா்.
ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி சனிக்கிழமை காணொலி மூலம் உரையாடினாா்.
அவா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது, உதவி ஆட்சியா் (பயிற்சி)ஆனந்த்மோகன், துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், ஆட்சியா் கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1091 பேரின் மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதில் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. 767 பேருக்கு உறுதி செய்யப்படவில்லை.
மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது.
அனைத்து காய்கறிச் சந்தைகள் மூடப்பட்டு, வேளாண்துறை மூலம் ஒரு பகுதிக்கு குறைந்தது 2 வாகனங்கள் மூலம் காய்கறி விற்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருள்களை வீடுகளில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா். மருந்தகங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியாா் மருத்துவமனைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
மாவட்டத்தில் 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் ஏற்கெனவே உள்ளவாறே மே 3-ஆம் தேதி வரை தொடரும்.
புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்களை அணுகி அவா்களுக்கான உதவிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவு, அத்தியாவசியப் பொருள்கள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.