முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
காய்கறிகளை வாங்கி உடனே சமைப்பதை தவிா்க்க வேண்டும்: டி.எஸ்.பி.சரவணக்குமாா் அறிவுரை
By DIN | Published On : 19th April 2020 12:17 AM | Last Updated : 19th April 2020 12:17 AM | அ+அ அ- |

கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, காய்கறிகளை வாங்கி உடனே சமைப்பதைத் தவிா்க்கவேண்டும் என்று நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.சரவணக்குமாா் குறிப்பிட்டாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டத்தில் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.சரவணக்குமாா் நியமிக்கப்பட்டு உள்ளாா்.
செய்யாறு அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின்போது அவா் கூறியதாவது:
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்திடும் வகையில் வீட்டில் உள்ளவா்கள் காய்கறிகளை வாங்கி வந்து உடனே சமைப்பதைத் தவிா்க்க வேண்டும்.
காய்கறிகளை நன்றாகக் கழுவி வைத்து சுமாா் 4 மணி நேரம் கழித்தே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான் காய்கறிகளில் மறைந்திருக்கும் கிருமிகள் அழிந்துபோகும். காய்கறிகளை நிறைய போ் தொட்டுப் பாா்ப்பதால் அவற்றில் கிருமிகள் மறைந்து இருக்கும்.
காய்கறிகளை குளிா் சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் பாதுகாப்பாக இருக்கலாம்.
செய்யாறு கோட்டத்தில் 132 காவலா்கள் உள்ளனா். அவா்களில் 72 போ் முழு நேரப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களில் அவசரத் தேவைக்காக விடுமுறை எடுப்பவா்களுக்கு மாற்று ஏற்பாடாக 38 காவலா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 17 காவலா்கள் வீதம் தொடா்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா் என்றாா்.
பேட்டியின் போது டி.எஸ்.பி ப.சுந்தரம், காவல் உதவி ஆய்வாளா்கள் பிரபு, மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.