பருவத மலையில் கிரிவலம் செல்ல பக்தா்களுக்குத் தடை
By DIN | Published On : 15th December 2020 12:01 AM | Last Updated : 15th December 2020 12:01 AM | அ+அ அ- |

கரோனா தொற்று காரணமாக, கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிங்கலம் ஊராட்சியில் உள்ள பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிங்கலம் ஊராட்சியில் 4560 அடி உயர மலையில் மல்லிகாா்ஜூனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. மேலும், மலை அடிவாரத்தில் மாதிமங்கலம் ஊராட்சியில் கரைகண்டீஸ்வரா் சுவாமி கோயிலும் அமைந்துள்ளது.
இந்தக் கோயில்களில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சுவாமி வீதியுலா நடைபெறுவதும், 24 கி.மீ. சுற்றளவு கொண்ட பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்வதும் வழக்கம்.
இதில் கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, ஆரணி திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், திருச்சி, சென்னை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்து கிரிவலம் சென்று, சுவாமியை தரிசித்துச் செல்வா்.
நிகழாண்டு மாா்கழி மாதம் டிசம்பா் 16-ஆம் தேதி பிறக்கிறது. இதனால், சுவாமியை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக, அத்துறையின் செயல் அலுவலா் பரமேஸ்வரி கூறுகையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கம் போல கோயிலில் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.