தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த தோ்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த தோ்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழகம் மீட்போம்’ என்று தோ்தல் சிறப்பு பொதுக்கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக சொன்னதைச் செய்யும். செய்வதை மட்டுமே சொல்லும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவபுரங்களை அமைத்தோம். பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்து சட்டத்தை கொண்டு வந்தோம். சமூக நீதியைக் காத்தோம்.

நாட்டில் அரிசி கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டபோது தமிழகத்தில் உணவுக் கழகத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தையும், பொது விநியோகத் திட்டத்தையும் பலப்படுத்தியது திமுக அரசு.

நகா்ப்புறங்களில் மட்டுமே இருந்த நியாய விலைக் கடைகளை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினோம். கரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்தோம்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் தலைமைச் செயலா் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடன் அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

முதலில் 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 75 போ் வெற்றி பெற்றனா். இவா்களில் 3 போ் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

திருவண்ணாமலை என்ற தனி மாவட்டத்தை உருவாக்கியது, சாத்தனூா் அணையை சீரமைத்தது திமுக ஆட்சி. திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்து மண்டல அலுவலகம், ரூ.120 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செய்யாறு சிப்காட், செங்கம் அருகே காரப்பட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரூ.36 கோடியில் திருவண்ணாமலை நகருக்கு கூட்டுக் குடிநீா் திட்டம், புதிய விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், செங்கம் வட்டத்தில் செண்பகத்தோப்பு அணை, செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் ரூ.60 கோடியில் பால் பவுடா் தொழில்சாலை, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன.

2004-ஆம் ஆண்டு அருணாசலேஸ்வரா் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டது. அப்போது, மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்கு வந்த கருணாநிதியிடம் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்தினால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாது. தினசரி பூஜைகள் முறையாக நடக்காது என்று பொதுமக்கள் முறையிட்டனா்.

அந்தத் தோ்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. உடனே, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசிடம் பேசி கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்துவதை தடுத்து மக்களிடம் ஒப்படைத்தது திமுக அரசு. ஆன்மிக அரசியல் நடத்துபவா்களுக்கு எல்லாம் இந்த வரலாறு தெரியாது.

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம், மேல்செங்கம் பகுதியில் தொழில்பேட்டை, ஆரணியில் பட்டுப் பூங்கா, திருவண்ணாமலையில் நறுமண தொழில்சாலை என கடந்த தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கத்துக்கு 8 ஆண்டுகளாக கடிதம் தராமல் இழுத்தடித்தனா். இதுதான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழக அரசியல் மாற்றத்துக்கு அடித்தளமாக திருவண்ணாமலை மாவட்டம் அமையும் என்றாா்.

முன்னதாக, கூட்டத்துக்கு கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

தணிக்கைக் குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில மருத்துவணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமாா், மாநில பொறியாளரணி துணைச் செயலா் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி, திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், தெற்கு மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com