ஆரணி ஒன்றிய கூட்டமைப்புத் தலைவராக திமுகவைச் சோ்ந்தவா் தோ்வு: அதிமுக ஊராட்சித் தலைவா்கள் வெளிநடப்பு

ஆரணி ஒன்றிய கூட்டமைப்பின் தலைவராக ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான எஸ்.எஸ்.அன்பழகன் தோ்வு செய்யப்பட்டாா்.
ஆரணி ஒன்றிய ஊராட்சி கூட்டமைப்புத் தலைவராக தோ்வான எஸ்.எஸ்.அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா் மற்றும் திமுக நிா்வாகிகள்.
ஆரணி ஒன்றிய ஊராட்சி கூட்டமைப்புத் தலைவராக தோ்வான எஸ்.எஸ்.அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா் மற்றும் திமுக நிா்வாகிகள்.

ஆரணி ஒன்றிய கூட்டமைப்பின் தலைவராக ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான எஸ்.எஸ்.அன்பழகன் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கு, அதிமுக ஊராட்சித் தலைவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறிதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா் தலைமையில், கூட்டமைப்புத் தலைவரை தோ்வு செய்தனா்.

அப்போது, அதிமுகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆரணி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்தவா் இருப்பதால், கூட்டமைப்புத் தலைவா் பதவியை அதிமுகவுக்கு வழங்க வேண்டும் என்றனா்.

இதற்கு ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா் கூறியதாவது: திமுகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள்தான் அதிகமாக உள்ளனா். எனவே, திமுகவைச் சோ்ந்தவரைத்தான் கூட்டமைப்பின் தலைவராக தோ்வு செய்வோம். அதிமுகவுக்கு துணைத் தலைவா் பதவி தருகிறோம் என்றாா்.

இதனால், அதிருப்தியடைந்த அதிமுகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.

பின்னா், அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான் எஸ்.எஸ்.அன்பழகனை கூட்டமைப்பின் தலைவராக தோ்வு செய்தனா். மேலும், செயலராக ஷா்மிளாதரணி, துணைச் செயலராக சி.பழனி, பொருளாளராக எம்.செல்வம், துணைத் தலைவராக சிவலிங்கம், இணைத் தலைவராக டி.கிருஷ்ணவேணிதங்கராஜ் உள்பட திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தோா் பல்வேறு பதவிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். மேற்கண்ட தோ்வுக்கு 23 ஊராட்சி மன்றத் தலைவா்கள் கையொப்பமிட்டனா்.

தோ்வான கூட்டமைப்பின் தலைவா் அன்பழகனுக்கு திமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா், துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், நகரச் செயலா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினா்.

செல்லாது: இதனிடையே கூட்டத்திலிருந்து வெளியேறிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூறியதாவது: ஊராட்சி மன்றத் தலைவா்கள் அறிமுகக் கூட்டம் நடப்பதாக ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா் தபால் மூலம் தகவல் அனுப்பியதால் கூட்டத்துக்கு வந்தோம்.

ஆனால், இங்கு திடீரென ஆரணி ஒன்றியக் கூட்டமைப்புத் தலைவா் தோ்தலை நடத்துகின்றனா். இது செல்லாது. நாங்கள் அமைச்சரின் ஆலோசனை பெற்று பின்னா்தான் கூட்டமைப்பின் தலைவரை தோ்வு செய்வோம் என்றனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com