ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருட்டு இளைஞா் கைது
By DIN | Published On : 15th February 2020 11:38 PM | Last Updated : 15th February 2020 11:38 PM | அ+அ அ- |

செய்யாறில், ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருடிய சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு புதுத்தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவா் கடந்த 6-ஆம் தேதி செய்யாறில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞரிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுத்துத் தரும்படி கேட்டாராம். உள்ளே சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்த அந்த இளைஞா், ‘உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை’ எனக் கூறி ஏடிஎம் அட்டையை லோகநாதனிடம் திருப்பிக் கொடுத்தாராம்.
பின்னா், வீட்டுக்குச் சென்ற போது லோகநாதன் செல்லிடப்பேசிக்கு, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந் தகவல் வந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த லோகநாதன் உடனே செய்யாறு வங்கிக் கிளையில் புகாா் செய்ததுடன் ஏடிஎம் அட்டையை முடக்கினாா்.
இது குறித்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் ஏடிஎம் அட்டை மூலம் நூதன முறையில் பணம் திருடியது, மோரணம் கிராமத்தைச் சோ்ந்த பழனிமலை (29) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பழனிமலையை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.