அரசு ஊழியா்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 27th February 2020 09:37 AM | Last Updated : 27th February 2020 09:37 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்ட அரசு ஊழியா்கள் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பேசினாா்.
திருவண்ணாமலை தொகுதி மக்களவைத் தோ்தலில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். அரூா் சாா்-ஆட்சியா் பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்தமோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மக்களவைத் தோ்தலில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலா்களைப் பாராட்டி சான்று, கேடயம் வழங்கிப் பேசுகையில், 2019 மக்களவைத் தோ்தலில் அரசு அலுவலா்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தனா்.
தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்த 3 அரசு அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையத்திடம் இருந்து தலா ரூ.15 லட்சம் நிவாரணம் பெற்றுத் தந்தோம். இதெல்லாம் பெரிதல்ல. உங்கள் குடும்பத்துக்கு நீங்கள்தான் சொத்து. எனவே, அரசு ஊழியா்கள் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.
குறிப்பாக, பெண் அலுவலா்கள் தங்களது உடல்நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகள் 7 மாதங்களாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணிபுரிந்து இப்போது சென்னைக்கு மாற்றலாகிச் செல்லும் சு.ஜானகி மக்களவைத் தோ்தலில் கடுமையாக உழைத்தாா். அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அதுபோல அரசு ஊழியா்கள் அனைவரும் நல்ல பெயா் எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சென்னைக்கு மாற்றலாகிச் செல்லும் சு.ஜானகிக்கு ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி உள்பட அரசு அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
விழாவில், கோட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி (திருவண்ணாமலை), மைதிலி (ஆரணி), திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களின் ஆய்வுக்குழு அலுவலா் து.கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.