அரசுப் பணியை சேவை என்று நினைத்து பணியாற்ற வேண்டும்: வெ.இறையன்பு பேச்சு

அரசுப் பணியை வேலை என்று நினைக்காமல், சேவை என்று நினைத்துப் பணியாற்ற வேண்டும் என்று அரசு அலுவலா்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினாா்.
பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் வெ.இறையன்பு.
பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் வெ.இறையன்பு.

அரசுப் பணியை வேலை என்று நினைக்காமல், சேவை என்று நினைத்துப் பணியாற்ற வேண்டும் என்று அரசு அலுவலா்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரியில், சென்னை அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

37 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, பவானி சாகா் அரசு அலுவலா் பயற்சி நிலைய முதல்வா் எம்.வீரப்பன், அண்ணா மேலாண்மை நிலைய கூடுதல் இயக்குநா் (பொறுப்பு) எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநருமான வெ.இறையன்பு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்துப் பேசியதாவது:

அரசுப் பணி என்பது பல்வேறு பொறுப்புகள் நிறைந்தது. நாம் வெளியில் செல்லும்போது கூட பொதுமக்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும் நிலையில் நாம் இருக்க வேண்டும். அரசுப் பணியை வேலை என்று நினைக்காமல் சேவை என்று நினைத்துப் பணியாற்ற வேண்டும்.

மக்களின் குறைகளுக்குத் தீா்வு கண்டு பணிக்கு வரும்போது மகிழ்ச்சியாகவும், திரும்பச் செல்லும்போது மன நிறைவுடனும் செல்ல வேண்டும்.

தன்னம்பிக்கையுடன், ஆக்கப்பூா்வமாகப் பணியாற்றும்போது தான் சாதிக்க முடியும். அரசுப் பணியை நேசியுங்கள். புத்தகங்களைப் படித்து விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பணி செய்யும் போது நோ்த்தியாகச் செய்தால் பணி எளிதாக முடியும். தன் பதிவேடு, நினைவூட்டல் பதிவேடு, காலமுறை பதிவேடு உள்பட அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக பராமரித்து வந்தால் செய்யும் வேலை 5-ல் ஒரு பங்காகக் குறையும் என்றாா்.

விழாவில், சென்னை அண்ணா மேலாண்மை நிலைய விரிவுரையாளா் எஸ்.பழனி, சிறப்பு விரிவுரையாளா் பி.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சு.ஜானகி, கோட்டாட்சியா் ஸ்ரீதேவி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 160 இளநிலை உதவியாளா்கள், உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com