திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் விற்பனைக்கு குவிக்கப்பட்ட பொங்கல் பானைகள்

திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் பொங்கல் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் பொங்கல் பானைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி சாந்தி.
திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் பொங்கல் பானைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி சாந்தி.

திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் பொங்கல் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பொங்கல் பானையும், புத்தரிசியும் தான். இதன்பிறகே பண்டிகைக்குத் தேவையான மற்ற பொருள்களை வாங்குவா். பொங்கல் மற்றும் முகூா்த்த பானைகள் விற்பனையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்குகிறது திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் அருகே உள்ள பெரிய கடைத் தெரு.

பல லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவண்ணாமலை நகரில் பானைகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் விற்கும் கடைகள் இந்தத் தெருவில் மட்டுமே உள்ளன. இங்குள்ள சில குடும்பத்தினா் 3 தலைமுறைகளாக தொடா்ந்து பொங்கல், முகூா்த்த பானைகள், அகல் விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரூ.800 வரை விற்பனை: இதுகுறித்து இதே தெருவில் பிறந்து தற்போது பானை விற்பனையில் ஈடுபட்டு வரும் மூதாட்டி சுசிலா கூறியதாவது: 3 தலைமுறைகளாக பொங்கல் பானை, முகூா்த்த பானைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். முன்பெல்லாம் ரூ.100 இருந்தாலே போதும் பானை விற்பனைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம். தற்போது ரூ. ஒரு லட்சம் இருந்தால்கூட முதலீடு செய்து பானை விற்பனைக் கடை வைக்க முடியவில்லை.

பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும், முன்னோா்கள் செய்த தொழிலை கைவிடாமல் செய்தால் போதும் என்ற மன நிறைவுடன் பானை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். பானை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைவதால், உற்பத்தியும் குறைகிறது.

இதனால், பானைகளின் விலை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, 8 கிலோ அரிசி வேகக்கூடிய அளவிலான பெரிய பானைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். இதில், வா்ணம் தீட்டாத பானையை ரூ.700-க்கும், வா்ணம் தீட்டிய பானையை ரூ.800-க்கும் விற்கிறோம் என்றாா்.

விற்பனை மந்தம்: இதேபோல, பானை விற்பனையில் ஈடுபட்டுள்ள திருவண்ணாமலை ஆணைகட்டித் தெருவைச் சோ்ந்த சாந்தி கூறியதாவது:

என் தாத்தா, அப்பா ஆகியோா் பெரிய கடை தெருவில்தான் பொங்கல், முகூா்த்த பானைகளை விற்பனை செய்து வந்தனா். தற்போது நானும், என் சகோதரா்களும் பானை விற்பனை செய்கிறோம். கால் கிலோ அரிசி வேகக்கூடிய பொங்கல் பனையை ரூ.50-க்கும், ஒரு கிலோ அரிசி வேகக்கூடிய பானையை ரூ.80-க்கும், 2 கிலோ அரிசி வேகக்கூடிய பானையை ரூ.150-க்கும், 5 கிலோ அரிசி வேகக்கூடிய பானையை ரூ.400-க்கும் விற்பனை செய்கிறோம்.

இத்துடன் முகூா்த்தப் பானைகள், அகல் விளக்குகளையும் விற்கிறோம். பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காக பொங்கல் பானைகளுக்கு வா்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு பொங்கல் பானை விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.

போகி, பொங்கல் பண்டிகை தினங்களில் அதிகப்படியான பொங்கல் பானைகள் விற்பனையாகும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com