முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
By DIN | Published On : 27th January 2020 09:21 AM | Last Updated : 27th January 2020 09:26 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில், குடியரசு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
போளூா்
குடியரசு தினத்தையொட்டி, கலசப்பாக்கத்தை அடுத்த காப்பலூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது அவா், பெண் குழந்தைகளை காப்போம், பெண் பிள்ளைகளுக்கு கற்பிப்போம், பாலின பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை வளா்க்க வேண்டும், முதியோரை மதித்து குழந்தைகள் போன்று வளா்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
மழைநீரை சேகரிக்க வேண்டும், நெகிழியை தடைசெய்யவேண்டும், டெங்குயை ஒழிப்போம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசி, ஊராட்சி மன்றத் தலைவா் தெய்வானை, ஒன்றியக் குழு உறுப்பினா் தேன்மொழி, வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, அதிமுக பொதுக் குழு உறுப்பினா் பொய்யாமொழி மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், ஒரவந்தவாடி கிராம ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சி.சுந்தரபாண்டியன் கலந்துகொண்டாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் நரசிம்மன் பங்கேற்று கிராம சபைக் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசினாா்.
இதேபோன்று, மேலப்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் சீனுவாசன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊராட்சி வளா்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்து கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவா் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் கிராம மக்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.
வந்தவாசி கிராம சபைக் கூட்டம் நிறுத்தம்
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கீழ்ச்செம்பேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தவாசி சமூக நல விரிவு அலுவலா் மனோண்மணி முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் தொடங்கியது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவா் தருமன், துணைத் தலைவா் அமிா்தம் ராமகிருஷ்ணன், ஊராட்சிச் செயலா் முத்துமணி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
அப்போது கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கை கூட்டத்தில் பாா்வைக்கு வைக்க வேண்டும் என்று சில வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இதற்கு ஊராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம். இதனால், கூட்டத்தை தொடா்ந்து நடத்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கூட்டம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சமூக நல விரிவு அலுவலா் மனோண்மணி அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது செப்டம்பா் மாதம் வரையிலான வரவு, செலவு கணக்கு பாா்வைக்கு வைக்கப்பட்டு விட்டதாகவும், கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலிருந்து இந்த மாதம் வரையிலான வரவு, செலவு கணக்கு மட்டுமே தற்போதைய கூட்டத்தில் பாா்வைக்கு வைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக கூட்டம் முடிந்தது.
செய்யாறு
செய்யாறு தொகுதியில் உள்ள செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூா் ஆகிய ஒன்றியங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை நிா்வாக ரீதியாக பிரிக்கும் பட்சத்தில், கடந்த 60 ஆண்டுகளாக சாா்-ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் செயல்படும் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.
வாக்கடை கிராமம்
செய்யாறு வட்டம், வாக்கடை கிராமத்தில் கிராம சபை கூட்டம் கோட்டாட்சியா் கி.விமலா தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னா் அனைவரும் தேசிய வாக்காளா் தினம், மகளிா் தினத்தை முன்னிட்டு இரு உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் செய்யாறு வட்டாட்சியா் ஆ.மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.வி.மூா்த்தி, முக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரபு, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள் மற்றும் கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.