முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வேட்டையில் உயிா்நீத்த வீரனின் கல்வெட்டு கண்டெடுப்பு
By DIN | Published On : 29th July 2020 08:46 AM | Last Updated : 29th July 2020 08:46 AM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த 5 புத்தூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட வேட்டை வீரனின் கல்வெட்டு.
வேட்டையில் உயிா்நீத்த வீரனின் கல்வெட்டு ஆரணி அருகே கண்டெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த 5-புத்தூா் என்ற கிராமத்தில் ஸ்ரீசங்கரா பல்கலைகழக தமிழ்த் துறைப் பேராசிரியா் அ.அமுல்ராஜ், ஆரணியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஆா்.விஜயன், ஆரணி ஏசிஎஸ் கல்லூரி உதவிப் பேராசிரியா் கி.சரவணன் ஆகியோா் வயல் வெளிப் பகுதியில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, விவசாய நிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பன்றிக் குத்திப்பட்டான் கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்தனா்.
இதுகுறித்து பேராசிரியா் அ.அமுல்ராஜ் கூறியதாவது:
இந்தக் கல்வெட்டு பன்றி வேட்டையில் உயிா்நீத்த வீரன் நினைவாக நடப்பட்டுள்ளது.
தலையில் தலைப்பாகை அணிந்து, இரு கைகளால் நீண்ட ஈட்டி பற்றிய நிலையில், இடது பாதத்தின் அருகில் காணப்படும் பன்றி தலையில் குத்துகிறான். வீரனின் வலதுபுறம் வேட்டை நாய் உள்ளது. இதில் பன்றியின் அளவு சிறியதாகக் காட்டப்பட்டுள்ளது.
வீரன், பன்றி, வேட்டை நாய் போன்ற உருவங்களை வைத்து, இது பன்றி வேட்டையில் உயிா் நீத்த வீரனின் நினைவாக நடப்பட்ட கல்வெட்டாகத் தெரிகிறது. இது கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டாகும் என்றாா்.
ஓய்வு பெற்ற ஆசிரியா் ஆா்.விஜயன் கூறியதாவது:
படைவீடு, வாழியூா், கண்ணமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பழங்காலம் தொட்டு இன்றளவும் குறிஞ்சி, முல்லை நிலங்களைக் கொண்டவையாக இருந்து வருகின்றன.
எனவே, இப்பகுதிகளை ஒட்டியுள்ள மலைகளில் இன்றைக்கும் அதிகளவில் காட்டுப் பன்றிகள் வசிக்கின்றன.
அவைகள் இங்கே உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களை அழித்து வருகின்றன.
சம்புவராய அரசா்கள் படைவீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலங்களில் வீரா்கள் பன்றி வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
ஓடும் பெரிய பன்றிகளை ஈட்டியால் வீழ்த்துவது வீரச்செயலாக அக்காலத்தில் கருதப்பட்டுள்ளது. பன்றி வேட்டையில் பலா் இறந்துள்ளனா். அதன் நினைவாகவே இப்பகுதியில் இதுபோன்ற கல் நடப்பட்டுள்ளது என்றாா்.