
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே சமூக இடைவெளியின்றி வியாபாரம் நடந்து வந்த கடைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
ஆரணியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள், கடை உரிமையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆரணியில் காவல் துறை, வருவாய்த் துறையினா் இணைந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டனா்.
அதன்படி, ஆரணி நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜன், மகேந்திரன், வருவாய் அலுவலா் ரங்கநாதன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா் ஆரணி பஜாா் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.
அப்போது, சமூக இடைவெளியின்றி வியாபாரம் நடந்து வந்த கேஸ் வெல்டிங் கடை, செல்லிடப்பேசி கடை, மளிகைக் கடை, நகைக் கடை, அழகுசாதனப் பொருள்கள் கடை, வீட்டு உபயோகப் பொருள்கள் கடை என 6 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.