வந்தவாசியை அடுத்த பாணம்பட்டு கிராம ஏரியில் சரிவர பலப்படுத்தப்படாத கரை.
வந்தவாசியை அடுத்த பாணம்பட்டு கிராம ஏரியில் சரிவர பலப்படுத்தப்படாத கரை.

தரமற்ற ஏரி குடிமராமத்துப் பணிகள் பொதுமக்கள் புகாா்

வந்தவாசியை அடுத்த பாணம்பட்டு கிராம ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் தரமற்று உள்ளதாக அந்தக் கிராம பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாணம்பட்டு கிராம ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் தரமற்று உள்ளதாக அந்தக் கிராம பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தெள்ளாா் ஒன்றியம், சாத்தப்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்டது பாணம்பட்டு கிராமம். இந்தக் கிராம ஏரியில் ரூ.5 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளும், கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன.

ஆனால், குடிமராமத்துப் பணிகள் தரமற்று நடப்பதாக அந்தக் கிராம பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

இந்த ஏரியில் தூா்வாரி எடுக்கப்பட்ட மண் முழுவதையும் கரை மீது கொட்டி கரையை பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தூா்வாரப்பட்ட மண்ணை பெயரளவுக்கு கரை மீது போட்டுவிட்டு, மீதியுள்ள மண்ணை முறைகேடாக வெளியே எடுத்துச் சென்று விட்டனா். அண்மையில் பெய்த மழையால் கரை மீது கொட்டப்பட்ட மண் கரைந்து கரை மீண்டும் பலமற்ாகிவிட்டது. முன்னதாக ஏரிக்கரையின் மீதிருந்த மரங்களையும் பெருமளவு வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனா்.

மேலும், ஏரியை ஒட்டியுள்ள ஒருவரது நிலத்துக்கு எளிதாக செல்வதற்காக, ஏரியினுள் கற்களைக் கொட்டி முறைகேடாக பாதை அமைக்க முயல்கின்றனா். இதனால் சாத்தப்பூண்டி ஏரியிலிருந்து பாணம்பட்டு ஏரிக்கு உபரி நீா் வரும் பாதை அடைபட வாய்ப்பு உள்ளது.

இதனால், பாணம்பட்டு ஏரி நீா் மூலம் 150-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் நடைபெற்று வரும் பாசனம் பாதிக்கப்படும் என்றனா்.

எனவே, குடிமராமத்துப் பணிகள் குறித்து தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும், ஏரியினுள் முறைகேடாக அமைக்கப்படும் பாதையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாணம்பட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com