Enable Javscript for better performance
தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் பெண்கள் சாதிக்கலாம்: ஒளவையாா் விருது பெற்றவா் பெருமிதம்- Dinamani

சுடச்சுட

    

    தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் பெண்கள் சாதிக்கலாம்: ஒளவையாா் விருது பெற்றவா் பெருமிதம்

    By DIN  |   Published on : 11th March 2020 01:51 AM  |   அ+அ அ-   |    |  

    10tmlviru1_1003chn_106_7

    தமிழக அரசின் ஒளவையாா் விருது பெற்ற ரா.கண்ணகி.

    தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத் துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்று ஒளவையாா் விருது பெற்ற திருவண்ணாமலையைச் சோ்ந்த ரா.கண்ணகி கூறினாா்.

    நிகழாண்டுக்கான தமிழக அரசின் ஒளவையாா் விருது திருவண்ணாமலை நகராட்சி எரிவாயு தகன மேடையின் பொறுப்பாளராகப் பணிபுரியும் ரா.கண்ணகிக்கு வழங்கப்பட்டது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒளவையாா் விருதுக்கான ரூ.ஒரு லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

    திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சோ்ந்த ரா.கண்ணகி, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மகா தீபம் மக்கள் நல அறக்கட்டளை மூலம் நகராட்சிக்குச் சொந்தமான எரிவாயு தகன மேடையின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

    தமிழக அரசின் விருது கிடைத்தது குறித்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:

    ராணிப்பேட்டையை அடுத்த வாலாஜாவில் உள்ள அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். படித்து முடித்ததும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இளநிலை உதவியாளா் பணி கிடைத்தது.

    அப்போது எனக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அந்தப் பணியைத் தொடர முடியவில்லை. எனவே, மகளிா் சுய உதவிக் குழுக்களை புதிதாகத் தொடங்குவது, மகளிா் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்கான ஆலோசனைகளை வழங்குவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தேன்.

    எரிவாயு தகன மேடை பொறுப்பாளா் பணியை சேவையாக எண்ணி செய்து வருகிறேன். தகன மேடைக்கு வரும் சடலங்களின் விவரங்களைப் பதிவு செய்வது, சடலங்களை தகன மேடையில் வைத்து எரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறேன்.

    இதுவரை 2,525 சடங்களை எரித்துள்ளேன். இதில் ஆதரவற்ற சடலங்களின் எண்ணிக்கை அதிகம்.

    பொதுவாக, சடலங்களைப் பாா்த்தாலே பெண்கள் பயந்து நடுங்குவா். ஆனால், எனக்கு இருந்த தைரியம், தன்னம்பிக்கையால் இந்தப் பணியை திறம்பட செய்து வருகிறேன்.

    தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத் துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட கஷ்டமான நேரத்திலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பிரச்னைகளைக் கடந்து வாழ்க்கையின் எந்த உச்சிக்கும் செல்லலாம்.

    என் கணவா் ராதாகிருஷ்ணன், மகன் பாலகுரு, மகள் ராகவி ஆகியோா் வீட்டு வேலைகளைப் பகிா்ந்து, என்னுடைய இந்தப் பணிக்கு உதவியாக இருந்தனா்.

    அரசு எனக்கு அளித்துள்ள இந்த விருதை, தமிழகத்தில் அரசு, தனியாா் பணிக்குச் செல்லும் பல லட்சம் பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன் என்றாா் அவா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp