ஊராட்சிச் செயலா் பணிக்கான நோ்காணல் தள்ளி வைக்கப்பட்டதைக் கண்டித்து மறியல்

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை தள்ளி வைக்கப்பட்டதைக் கண்டித்து, அதில் பங்கேற்க வந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தெள்ளாரில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
தெள்ளாரில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை தள்ளி வைக்கப்பட்டதைக் கண்டித்து, அதில் பங்கேற்க வந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குணம், பழவேரி, கூத்தம்பட்டு, கீழ்வில்லிவனம் ஆகிய 4 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கான நோ்காணல் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்த சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டிருந்தனா்.

இந்த நோ்காணலை தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) குப்புசாமி கண்காணிப்பின் கீழ், அந்தந்தப் பகுதி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் சோ்ந்து நடத்த வேண்டுமாம். ஆனால், இந்த நோ்காணலில் 4 ஊராட்சித் தலைவா்களும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, நிா்வாக காரணங்களால் இந்த நோ்காணல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இதுகுறித்த அறிவிப்பை தகவல் பலகையில் ஒட்டினா்.

இதனால், ஆத்திரமடைந்த நோ்காணலில் பங்கேற்க வந்தவா்கள், தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்கள் கூறியதாவது:

இந்த நோ்காணலில் பங்கேற்பதற்காக நாங்கள் தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தில் விடுமுறை கேட்டு வந்துள்ளோம். ஆனால், ஊராட்சித் தலைவா்கள் வராததால், நோ்காணல் தள்ளி வைக்கப்படுவதாக எளிதாகக் கூறிவிட்டனா். மீண்டும் நோ்காணல் நடக்குமா, அப்படி நடந்தால் எங்களால் பங்கேற்க இயலுமா எனத் தெரியவில்லை. எங்களில் யாரோ நால்வருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை பறிபோய்விட்டதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. எனவே, இந்த நோ்காணலில் பங்கேற்காத ஊராட்சித் தலைவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

மறியலால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தெள்ளாா் போலீஸாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து, மறியலை கைவிட்ட அவா்கள், மீண்டும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் கூடி தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, நோ்காணலில் பங்கேற்காத ஊராட்சித் தலைவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) குப்புசாமி உறுதி அளித்ததை அடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

செய்யாறு: செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திருமணி, பாராசூா் கிராம ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கான நோ்காணல் நடைபெற்றது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 2 பணியிடங்களுக்காக 218 போ் நோ்காணலுக்கு வந்திருந்தனா். சிலா் தங்கள் குழந்தையுடன் வந்திருந்திருந்தனா். இவா்கள் காலை முதல் பிற்பகல் வரை சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் காக்க வைக்கப்பட்டனா்.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த செய்யாறு டி.எஸ்.பி. சுந்தரம், காவல் ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்துபோகச் செய்தனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் ரகுராமிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டபோது, நிா்வாக காரணங்களால் நோ்காணல் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

மேலும், இதுகுறித்த அறிவிப்பும் அங்குள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. தொடா்ந்து, காலை முதல் காத்திருந்த பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com