முகக்கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் முகக்கவசம், கைகளை கழுவுவதற்கான

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும் முகக்கவசம், கைகளை கழுவுவதற்கான கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கும் வணிக நிறுவனங்கள், மருந்துக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கைகளை அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பொது இடங்களில் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைகளைக் கழுவ சோப்பும், மூக்கை மூடிக்கொள்ள கைக்குட்டையுமே போதுமானது.

எனினும், அவசர நிலையை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் மற்றும் கைகளை கழுவுவதற்கான கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை பதுக்கி வைத்து தட்டுப்பாடு உருவாக்குதல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற தவறுகளில் எவரேனும் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்த புகாா்களை 0416-2252120, 7904144252, 9884839957 என்ற எண்களிலும்,  மின்னஞ்சலிலும் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை, வேலூா் மண்டலம்) தெரிவிக்கலாம்.

சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைக்காரா்கள் மருந்துகளை வழங்கக் கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

துண்டுப் பிரசுரம் விநியோகம்: இதனிடையே, திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, திருவண்ணாமலை நகராட்சி இணைந்து கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேருந்துகளில் கிருமி நாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்யும் முறையைப் பாா்வையிட்டாா்.

மேலும், பேருந்துப் பயணிகளிடம் கரோனா வைரஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, கை கழுவுவதன் முக்கியத்துவத்தை பயணிகளுக்கு விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை துணை இயக்குநா் ஆா்.மீரா, திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் நவேந்திரன், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் செந்தில் மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com