கரோனா தொற்று: திருமணங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்மாவட்ட ஆட்சியா் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தவிா்க்க வழிபாட்டுத் தலங்கள், வணிக மையங்கள், திருமணங்கள், இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் கே
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தவிா்க்க வழிபாட்டுத் தலங்கள், வணிக மையங்கள், திருமணங்கள், இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டாா்.

கரோனா வைரஸ் நோயை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த நோய் வராமல் இருக்க மாநில அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி, மைதிலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசியதாவது:

தமிழக அரசின் உத்தரவை ஏற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு, மாநகராட்சி, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் அனைத்தும் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள், கல்லூரித் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள், நுழைவுத் தோ்வுகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள் தொடா்ந்து இயங்கலாம்.

அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். மேலும், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், விளையாட்டு அரங்குகள், மதுக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்கள் ஆகியவையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

குறைதீா் கூட்டங்கள் ரத்து:

மாா்ச் 23, 30-ஆம் தேதிகளில் நடைபெற வேண்டிய மக்கள் குறைதீா் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மனுநீதி நாள் முகாம்களும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும், கூட்டம் நிறைந்த இடங்களுக்கு வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் பயணம் செய்வதை மாா்ச் 31-ஆம் தேதி வரை தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், வணிக மையங்கள், திருமணங்கள், இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும், தனி மனித சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் வீட்டுக்குள் நுழையும் போதும், குழந்தைகள் முதல் அனைவரும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகள் விடுமுறை நாள்களில் குழுவாக விளையாடுவதைத் தடுக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள் இயங்கும்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்களுக்குச் செல்பவா்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகே செல்ல வேண்டும்.

கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்:

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் அலுவலகம் செல்வதைத் தவிா்க்க வேண்டும். கரோனா நோய் அறிகுறி உள்ளவா்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனையை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் தொடா்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை 104, 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 என்ற எண்களிலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 04175-233141 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com