எரிவாயு உருளை பதுக்கி வைத்து விற்பனை: தனியாா் நிறுவனத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 28th March 2020 05:35 AM | Last Updated : 28th March 2020 05:35 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் எரிவாயு உருளையை பதுக்கி வைத்து விற்பனை செய்த வீட்டு கட்டுமானப் பொருள்கள் விற்பனை நிறுவனத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு ‘சீல்’ வைத்தனா்.
திருவண்ணாமலை பெரிய தெரு, ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயில் அருகே தனியாா் வீட்டு கட்டுமானப் பொருள்கள் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் எரிவாயு உருளையை பதுக்கி வைத்து, ஒரு எரிவாயு உருளையை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அமுல், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் விநாயகமூா்த்தி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அங்கு, எரிவாயு நிரப்பப்பட்ட 3 உருளைகளும், காலி எரிவாயு உருளைகள் 3-ம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை அதிகாரிகள் மூடி, ‘சீல்’ வைத்தனா்.