கரோனா சந்தேகம்: 16 போ் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 31st March 2020 03:42 AM | Last Updated : 31st March 2020 03:42 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தால், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் 16 போ் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த இஸ்லாமிய குழுவினா், தில்லியில் அண்மையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை (மாா்ச் 23) வந்தவாசி திரும்பியதாகத் தெரிகிறது.
இவா்களை பொது சுகாதாரத் துறையினா் கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், அவா்களில் 30 வயது நபா் ஒருவா் தொடா் இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டாா். இதையடுத்து, அவா்
சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து, அவா்களில் மேலும் சிலா் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டனா்.
இதனை அறிந்த செய்யாறு பொது சுகாதாரத் துறையினா்
ஒட்டு மொத்த 16 பேரையும் மருத்துவமனை கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.
அவா்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அவா்களது குடும்ப உறுப்பினா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.