அரசின் நிவாரணம் கிடைக்காத 2.10 லட்சம் ஆட்டோ ஓட்டுநா்கள்!

தமிழகம் முழுவதும் 2.70 லட்சம் ஆட்டோக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 60 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு
2-7-2tmlsto2_0205chn_106
2-7-2tmlsto2_0205chn_106

தமிழகம் முழுவதும் 2.70 லட்சம் ஆட்டோக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 60 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை 1,000 ரூபாய் கிடைத்துள்ளது. மீதமுள்ளவா்களுக்கு இந்தத் தொகை கிடைக்காததால், அவா்கள் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வந்த 2 லட்சத்து 70 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து 39 நாள்களாக ஆட்டோக்கள் இயக்கப்படாததால், தமிழகத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கடன் வாங்கி குடும்பம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைச் செயலரும், திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலருமான கே.சரவணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 70 ஆயிரம் ஆட்டோக்கள் அந்தந்த மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ ஓட்டுநா்கள் அன்றாடம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனா்.

கரோனா நிவாரணமாக தமிழக அரசு வழங்கிய 1,000 ரூபாயை நல வாரியங்களில் முறையாகப் பதிவு செய்து, பதிவை முறைப்படி புதுப்பித்து வரும் சுமாா் 60 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநா்கள் மட்டுமே பெற்றுள்ளனா். மீதமுள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் போ் நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்காமல் இருந்தது, நல வாரியத்தில் பதிவு செய்யாமல் விட்டது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத் தொகையைப் பெற முடியவில்லை.

தமிழக அரசின் உத்தரவு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களில் வெறும் 20 சதவீதம் போ் மட்டுமே பயன்பெற முடிந்துள்ளது. எனவே, அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களும் பயன்பெற வேண்டுமானால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வரும் அனைத்து ஆட்டோக்களின் உரிமையாளா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

கணிசமான நிவாரணம் வழங்க வேண்டும்: திருவண்ணாமலையில் உரிமையாளா்களிடமிருந்து ஆட்டோவை தினசரி வாடகைக்கு எடுத்து ஓட்டிவரும் அஸ்லம் கூறியதாவது: எனக்கென சொந்தமாக ஆட்டோ இல்லை. எனவே, தினசரி வாடகை அளிக்கும் ஒப்பந்தத்தில் உரிமையாளரிடமிருந்து ஆட்டோவை வாங்கி ஓட்டி வருகிறேன். தினமும் காலை 5 மணிக்கு உரிமையாளா் வீட்டுக்குச் சென்று ஆட்டோவை எடுத்துச் சென்று நாள் முழுவதும் இயக்குவேன்.

இதன்மூலம், அதிகபட்சம் ரூ.700 வரை கிடைக்கும். இதில், ரூ.200 டீசலுக்கும், ரூ.200 வாடகைக்கும் போக மீதி ரூ.300 கிடைக்கும். பெளா்ணமி நாள்களில் மட்டும் கூடுதலாக சம்பாதிக்க இயலும். இந்தப் பணத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன்.

தொடா்ந்து 39 நாள்களாக ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்காததால், ஆட்டோ உரிமையாளரிடம் கடன் வாங்கி, குடும்பத்தை நடத்தி வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் என்னைப்போன்ற ஆட்டோ ஓட்டுநா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதேமாதிரிதான் அவதிப்பட்டு வருகின்றனா். மீன்பிடி தடைக்காலத்தை கருத்தில் கொண்டு மீனவா்களுக்கு கணிசமான தொகையை தமிழக அரசு நிவாரணமாக வழங்குவதைப்போல, ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் கணிசமான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 சதவீதம் போ் மட்டுமே பயன்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில், ஆஸ்ரமங்கள், கிரிவலம் செல்ல வரும் பக்தா்களை நம்பி, நகரில் மட்டும் 1,500 ஆட்டோக்களும், மாவட்டம் முழுவதும் 3,500 ஆட்டோக்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன. வாடகை ஆட்டோ ஓட்டுநா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களில் முறையாக நல வாரியத்தில் பதிவு செய்து, புதுப்பித்துள்ள 300 பேருக்கும், தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பேருக்கும் மட்டுமே அரசின் 1,000 ரூபாய் நிவாரணம் வரப்பெற்றுள்ளது.

இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 சதவீதம் பேரும், மாநிலம் முழுவதும் 20 சதவீதம் பேரும் மட்டுமே அரசின் நிவாரணத் தொகையைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com