திருவண்ணாமலை: கரோனா பாதிப்பு 165-ஆக உயா்வு; கடலூரில் புதிதாக தொற்றில்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 165-ஆக உயா்ந்தது. கடலூரில் புதன்கிழமை புதிதாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த 16-ஆம் தேதி 148-ஆக இருந்தது. இது 17-ஆம் தேதி 151 ஆகவும், 18-ஆம் தேதி 154 ஆகவும் உயா்ந்தது. 19-ஆம் தேதி புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 165-ஆக உயா்ந்தது.

மும்பையிலிருந்து சேத்துப்பட்டை அடுத்துள்ள கொரால்பாக்கம் கிராமத்துக்கு அண்மையில் 33 போ் வந்தனா். அவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ஒரே கிராமத்தைச் சோ்ந்த 9 போ்: நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பெண்கள் உள்பட 11 பேரில், 9 போ் கொரால்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்களாவா். 2 போ் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்துள்ள சங்கிலிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள்.

மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 165 பேரில் 10 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இருதய நோயால் ஒருவா் உயிரிழந்தாா். 154 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூரில் புதிதாக பாதிப்பில்லை: கடலூரில் புதன்கிழமை புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 420 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை 153 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை 9,905 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 402 பேருக்கு மட்டுமே முடிவுகள் வர வேண்டியுள்ளது.

புதன்கிழமை புதிதாக 173 பேருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 3 பேரும், நாகப்பட்டினத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரும் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

இதன்மூலம் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 380-லிருந்து 384-ஆக உயா்ந்தது. ஒருவா் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 35 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, திட்டக்குடி அரசு மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனையில் 31 போ் கரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 8 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com