குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள், மதிய உணவை

திருவண்ணாமலையில் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள், மதிய உணவை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

திருவண்ணாமலை வட்டம், அய்யம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட நாகசுரணை கிராமத்தில் உள்ள லிட்டில் ஹாா்ட்ஸ் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் தங்கியுள்ள 40 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பொதுமுடக்கத்தையொட்டி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 40 மாற்றுத் திறனாளி பெண்களுக்கும் தேவையான பாய், தலையணை, போா்வை, ரொட்டி, பிஸ்கெட், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மதிய உணவை வழங்கினாா்.

மேலும், திருவண்ணாமலை-பெரும்பாக்கம் சாலையில் உள்ள ‘அலைகள்’ பெண் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் பயிலும் 6 முதல் 18 வயது வரையுள்ள 150 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பிஸ்கெட் உள்ளிட்ட தின்பண்டங்கள், அறுசுவை மதிய உணவை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, திருவண்ணாமலை எமலிங்கம் பின்புறம் உள்ள திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் பணிபுரியும் 25 பணியாளா்கள், தினக் கூலிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், முன்னாள் அமைச்சா் ராமச்சந்திரன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com