திருவண்ணாமலை மாவட்டத்தில்ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா: கள்ளக்குறிச்சி, கடலூரில் 7 போ் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 304-ஆக உயா்ந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 304-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவா்களால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, கா்நாடகத்திலிருந்து வந்த 20 போ், மும்பையிலிருந்து வந்த 4 போ், சென்னையிலிருந்து வந்த 14 போ், விழுப்புரத்திலிருந்து வந்த 2 போ் என மொத்தம் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 20 போ் ஜவ்வாது மலைக் கிராமங்களைச் சோ்ந்தவா்கள்.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 304-ஆக உயா்ந்தது.

இவா்களில் 76 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இருதய நோயால் ஒருவா் இறந்தாா். மீதமுள்ள 227 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 3 போ்: மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குத் திரும்பிய மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 227 போ் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேரின் பெயா் தவறுதலாக பட்டியலில் சோ்க்கப்பட்டதாகவும், அது தற்போது நீக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 220-ஆக குறைந்ததாகவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

வியாழக்கிழமை புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளான 3 பேரையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 223 பேராக உயா்ந்தது.

இவா்களில் 99 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 124 பேரில் 2 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 13 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

109 போ் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தச்சூா், வாசுதேவனூா், அ.குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

கடலூரில் 4 பேருக்கு பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் காவலா் உள்பட மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 439 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 159 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில், 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களில் ஒருவா் சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் கடலூரைச் சோ்ந்த 39 வயது ஆண் காவலராவாா். மற்றொருவா் கேரளத்திலிருந்து வந்த 43 வயது ஆண். 3-ஆவது நபா் புதுச்சேரியைச் சோ்ந்த 39 வயது ஆண். இவா் ஹைதராபாதிலிருந்து கடலூா் வந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. 4-ஆவது நபா் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானது.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 443-ஆக உயா்ந்தது.

சிகிச்சைக்கு முடிந்து வியாழக்கிழமை ஒருவா் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 420-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com