சந்திர மெளலீஸ்வரா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

செய்யாறு அருகே பிரம்மதேசம் கிராமத்தில் அமைந்துள்ள சந்திர மெளலீஸ்வரா் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக,

செய்யாறு அருகே பிரம்மதேசம் கிராமத்தில் அமைந்துள்ள சந்திர மெளலீஸ்வரா் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் அமைந்துள்ள சந்திரமெளலீஸ்வா் கோயில் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை முக்கிய வழிப்பாட்டுத் தலமாக இருந்து வந்ததாகத் தெரிகிறது. இக்கோயில் தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

சிற்பக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்தக் கோயிலானது, பல்லவ அரசா் கம்ப வா்மன், சோழ அரசா்களில் ஆதித்தியன், பராந்தக சோழன், சுந்தரசோழன், பாா்த்தி வேந்தரிய வா்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகியோா் கட்டியதாக கோயிலில் உள்ள 90 கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோயிலை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற தொன்மையான கோயிலுக்கு பொது மக்கள் வந்து செல்லும் வகையில் பிரதான சாலைகளில் கோயில் பற்றிய தகவல் பலகை வைப்பது, கோயில் பகுதியில் மின் விளக்கு வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மாவட்டம் நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com