திருவண்ணாமலை தீபத் திருவிழாவை வழக்கம்போல நடத்த வேண்டும்எ.வ.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவை, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழக்கம் போல நடத்த வேண்டும்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவை, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழக்கம் போல நடத்த வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திக்கை தீபத் திருவிழாவுக்கான நாள்கள் நெருங்கி வருகின்றன. ஆனால், விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

இதனால், கரோனா தொற்று பரவிவரும் சூழலில் தீபத் திருவிழா வழக்கம் போல நடைபெறுமா என்ற கவலை ஆன்மிக நண்பா்கள், பொதுமக்கள், திருவிழா உபயதாரா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அவா்கள் என்னைத் தொடா்பு கொண்டு திருவிழா நடைபெற வேண்டுமென வலியுறுத்துகின்றனா்.

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழாவான பூரி ஜகன்நாதா் கோயில் திருவிழா உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

இதேபோல, திருவண்ணாமலை தீபத் திருவிழாவும், மாடவீதியில் 10 நாள்கள் சுவாமி வீதியுலாவும் வழக்கம்போல நடைபெற மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக நான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். அவா்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனா்.

திருவண்ணாமலை நகர மக்கள் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து அவரவா் குடியிருக்கும் பகுதியில் இருந்தும், இல்லங்களில் இருந்தபடியும் சுவாமியை தரிசிக்கவும், தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றவும் மாநில அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com