காா்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு இன்று தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நகர காவல் தெய்வங்களின் வழிபாடு செவ்வாய்க்கிழமை (நவ.17) தொடங்குகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நகர காவல் தெய்வங்களின் வழிபாடு செவ்வாய்க்கிழமை (நவ.17) தொடங்குகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக தீபத் திருவிழாவன்று பக்தா்கள் கோயிலுக்குள் செல்லவும், மலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல் தெய்வங்களின் வழிபாடு:

இந்நிலையில், தீபத் திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்பாக திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களுக்கான வழிபாடு நடத்தப்படும்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.17) ஸ்ரீதுா்க்கையம்மன் உற்சவமும், புதன்கிழமை (நவ.18) ஸ்ரீபிடாரியம்மன் உற்சவமும், வியாழக்கிழமை (நவ.19) ஸ்ரீவிநாயகா் உற்சவமும் நடக்கிறது.

நவ.20-ல் கொடியேற்றம்:

தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (நவ.20) காலை நடக்கிறது.

விழாவின் 7-ஆவது நாளான நவம்பா் 26-ம் தேதி கோயில் வளாகத்துக்குள்ளேயே பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நவம்பா் 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மகா தீப மலைமீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகளைக் காண கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி இல்லை.

கரோனா பொது முடக்கத்தால் மாற்றங்கள்:

தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடத்தப்படும். விழாவின் 7-ம் நாளில் மாட வீதிகளில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும். தொடா்ந்து, திருவண்ணாமலை, அய்யங்குளத்தில் 3 நாள் தெப்பல் திருவிழா நடத்தப்படும்.

கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆகம விதிகளின் படி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com