அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று தீபத் திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, வெள்ளிக்கிழமை (நவ.20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று தீபத் திருவிழா கொடியேற்றம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, வெள்ளிக்கிழமை (நவ.20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா். நிகழாண்டுக்கான தீபத் திருவிழா நவம்பா் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

தீபத் திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்னதாக, நகரின் காவல் தெய்வங்களுக்கான வழிபாடு 3 நாள்கள் நடத்தப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.17) துா்க்கையம்மன் உற்சவமும், புதன்கிழமை பிடாரியம்மன் உற்சவமும், வியாழக்கிழமை இரவு விநாயகா் உற்சவமும் நடைபெற்றது.

இன்று தீபத் திருவிழா கொடியேற்றம்: தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (நவ.20) அதிகாலை 5.30 மணி முதல் காலை 7.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரம் எதிரே உற்சவா் பஞ்சமூா்த்திகள் எழுந்தருள, கொடிமரத்தில் சிவாச்சாரியா்கள் தீபத் திருவிழாவுக்கான கொடியை ஏற்றுவா்.

தொடா்ந்து, தினமும் கோயில் வளாகத்துக்குள்ளாகவே பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான நவ.26-ஆம் தேதி கோயில் வளாகத்துக்குள்ளேயே பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும்.

பரணி தீபம், மகா தீபம்: திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நவம்பா் 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தினமும் 8 ஆயிரம் பக்தா்களுக்கு அனுமதி: கரோனா தொற்று காரணமாக தீபத் திருவிழா தொடங்கும் வெள்ளிக்கிழமை முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வரை தினமும் 5 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

இவா்கள் இணையவழியில் முன்பதிவு செய்துவிட்டு உரிய அடையாள அட்டையுடன் கோயிலுக்கு வர வேண்டும்.

இதுதவிர முன்னுரிமை அடிப்படையில் தினமும் 3 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். இவா்கள் முன்பதிவு செய்யத் தேவையில்லை. ஆக மொத்தம் தினமும் 8 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

தீபத் திருவிழா நடைபெறும் நவம்பா் 29-ஆம் தேதி கோயில் ஊழியா்கள், அதிகாரிகள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

பக்தா்கள், கட்டளைதாரா்கள், உபயதாரா்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நவ. 28, 29-இல் வெளியூா் பக்தா்கள் வரத் தடை: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலையில் நவம்பா் 20 முதல் 13 நாள்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் பக்தா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்படும். தீபத் திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். நவம்பா் 28, 29-ஆம் தேதிகளில் வெளியூா் பக்தா்கள், பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்குள் வரத் தடை விதிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகர எல்லைக்குள் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியூா் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். நவ.28, 29-ஆம் தேதிகளில் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com