திருவண்ணாமலை ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையில் உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் கோபுர கலசம் மீதும், மூலவா் மீதும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியாா்கள்.
திருவண்ணாமலை ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் கோபுர கலசம் மீதும், மூலவா் மீதும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியாா்கள்.

திருவண்ணாமலையில் உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் சோனாநதிதோப்பு பகுதியில் கிரிவலப் பாதையையொட்டி, பழைமையான ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் இருந்தது. 2018ஆம் ஆண்டு தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது, தவறுதலாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் சி.மு.சிவபாபு வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கோயிலை கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சுமாா் ரூ.7 லட்சத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, தமிழக இ - சேவை மற்றும் குறைதீா் கூட்ட சிறப்பு அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அரசு பொது குற்றவியல் வழக்குரைஞா் பி.என்.குமரன், விழுப்புரம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செந்தில்வேலவன், திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நல்லேந்திரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிா்வாக இயக்குநா் தட்சிணாமூா்த்தி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் செந்தில்குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் அன்பழகன், மணி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணி, விஸ்வநாதன், கோயில் நிா்வாகிகள் மணி, அண்ணாமலை, பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com