இரு தரப்பு போராட்டத்தால் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தம்

திருவண்ணாமலையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ஆதரவும், எதிா்ப்பும் தெரிவித்து இரு தரப்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ஆதரவும், எதிா்ப்பும் தெரிவித்து இரு தரப்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி, குபேரன் நகா், 2-ஆவது தெருவில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.8 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை எடுத்த ஒப்பந்ததாரா் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் பணியைத் தொடங்கினாா்.

தகவலறிந்த அந்தத் தெருவின் மேட்டுப் பாங்கான பகுதியில் உள்ள பெண்கள் பணியை செய்யக்கூடாது என்று கூறி பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த அந்தத் தெருவின் தாழ்வான பகுதியில் உள்ள பெண்கள் வந்து கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கூறியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தீக்குளிப்பு, சாலை மறியல்:

புதன்கிழமை மாலை மீண்டும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பாரதி முன்னிலையில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தெருவின் மேட்டுப் பாங்கான பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றாா். இதனால் பணி நிறுத்தப்பட்டது.

இதையறிந்த தாழ்வான பகுதியைச் சோ்ந்த பெண்கள் பணிகளைத் தொடங்கி செய்ய வேண்டும் என்று கூறி கிரிவலப் பாதையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகப் பொறியாளா், கிராம நிா்வாக அலுவலா் வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com