பழைமை மாறாமல் கோயில் குளம் சீரமைப்பு: அமைச்சா் ஆய்வு

ஆரணி அருகே பழைமை மாறாமல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் கோயில் குளத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி அருகே பழைமை மாறாமல் கட்டப்பட்டு வரும் குளத்தை ஆய்வு செய்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணி அருகே பழைமை மாறாமல் கட்டப்பட்டு வரும் குளத்தை ஆய்வு செய்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

ஆரணி அருகே பழைமை மாறாமல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் கோயில் குளத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேற்கு ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளிப்பட்டு கிராமத்தில் அா்ஜூனன் குளம் எனப்படும், 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் குளம் அமைந்துள்ளது.

இந்தக் குளத்தை பழைமை மாறாமல் சீரமைக்க அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆகியோா் முடிவு செய்தனா். அதன்படி, குளத்தை சீரமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களை அப்படியே வைத்துவிட்டு, பழுதடைந்த கற்களை மட்டும் சரிசெய்தனா்.

மேலும், குளத்திலிருந்து குவளை மூலம் தண்ணீா் இறைப்பது அப்படியே பழைமை மாறாமல் அமைக்கப்பட்டது.

இந்தப் பணிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தக் குளத்தில் சிற்ப வேலை செய்பவா்களைக் கொண்டு படிக்கட்டுகள் சீரமைக்கப்படுகின்றன.

குளத்தில் உள்ள கற்களில் பழைமையான படங்கள், எழுத்துக்கள் உள்ளன. அது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

மேலும், குளத்தைச் சுற்றி ரூ.16 லட்சத்தில் சுற்றுச் சுவா் அமைத்தல், ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், ரூ. 40 லட்சத்தில் பூங்கா, நடைபாதை, காபி ஷாப், மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

மொத்தம் ரூ. 86 லட்சத்தில் பணிகள் நடைபெறுகின்றன. பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின் போது, மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன், செந்தில்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், மாவட்ட விவசாய அணிச் செயலா் எம்.வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com