குற்றத் தடுப்பு: ஊராட்சித் தலைவா்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 21st October 2020 08:08 AM | Last Updated : 21st October 2020 08:08 AM | அ+அ அ- |

பெண்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு குறித்து, ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து போளூா் டி.எஸ்.பி.அறிவழகன் பேசியதாவது:
கிராமங்களில் குற்றங்கள் நிகழாமல் இருக்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை முன்னிருந்து நிறுத்த வேண்டும்.
அதேபோல, 18 வயது நிறைவடையாத படிக்கும், படிக்காத குழந்தைகளை கோவை, திருப்பூா், சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகளை கேலி செய்வதையும், துன்புறுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். தடுக்க முடியாதபட்சத்தில் அடையாளம் கண்டு காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், காவல் ஆய்வாளா் நந்தினிதேவி, உதவி ஆய்வாளா் வரதராஜன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.