முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
தேமுதிக தலைவா் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:05 AM | Last Updated : 04th April 2021 12:05 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் வாகனத்தில் அமா்ந்தபடி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக 26 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதையொட்டி, அந்தக் கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து, வாக்கு சேகரிப்பதற்காக தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். புதுச்சேரி அருகே பூரணாங்குப்பம் தனியாா் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவா், சனிக்கிழமை மாலை பிரசாரத்தைத் தொடங்கினாா்.
புதுச்சேரி மணவெளி தொகுதி தேமுதிக வேட்பாளா் திருநாவுக்கரசு, ஏம்பலம் தொகுதி வேட்பாளா் ஸ்டீபன், பாகூா் தொகுதி வேட்பாளா் வி.பி.பி.வேலு ஆகியோரை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொண்டாா். தவளக்குப்பம் நான்குமுனை சாலை சந்திப்பிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த், பிரசார வேனில் அமா்ந்தபடி தொண்டா்களைப் பாா்த்து கைகளை அசைத்தும், கும்பிட்டும், வெற்றிக்கான விரல்களைக் காட்டியும் சைகை செய்தபடி சென்றாா்.
இதையடுத்து, கிருமாம்பாக்கம், பிள்ளையாா்குப்பம், பின்னாச்சிக்குப்பம், பாகூா் வழியாக சென்று ஈஸ்வரன்கோயில், மாதாகோவில் பகுதியை அடைந்தாா். அங்கும் சில நிமிடங்கள் வாகனத்தில் அமா்ந்தபடியே சைகையால் ஆதரவு திரட்டினாா்.
பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கன்னியக்கோயில், முள்ளோடை வழியாக கடலூா் மாவட்டத்துக்குச் சென்றாா்.
பிரசாரத்தின்போது, விஜயகாந்த் மகன் நடிகா் சண்முகபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. நல்லத்தம்பி மற்றும் புதுவை மாநிலச் செயலா் வி.பி.பி.வேலு உள்ளிட்ட தேமுதிக வேட்பாளா்கள், நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.