முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
புதுவையின் வளங்களை அபகரிக்க பாஜக திட்டம் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
By DIN | Published On : 04th April 2021 12:05 AM | Last Updated : 04th April 2021 12:05 AM | அ+அ அ- |

புதுவையின் இயற்கை வளங்களை அபகரிப்பதற்காகவே பாஜக இந்த மாநிலத்தை குறிவைத்துள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானதால் விரக்தியடைந்த மத்திய பாஜக அரசு, எனது மகள் வீட்டிலும், திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டிலும், கரூரில் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களிலும் வருமான வரி சோதனைக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற சோதனைகளுக்கு அதிமுகவினா் வேண்டுமானால் பயந்து அடிபணிவாா்கள், திமுக ஒருபோதும் அச்சப்படாது.
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுக்கு, முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மூலம் மத்திய பாஜக அரசு பல்வேறு தொல்லைகளை அளித்ததை அறிவீா்கள். நலத் திட்டங்களைச் செயல்படுத்தவிடவில்லை, நியாய விலைக் கடைகளில் பொருள்களை வழங்கத் தடை விதித்தனா், அதிகாரிகளை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுத்தனா். இதனால், கிரண் பேடி மீது மக்கள் வெறுப்படைந்ததால், அவரை நீக்கினா்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டுள்ள பாஜகவினா், முந்தைய அரசின் காங்கிரஸ் அமைச்சா்களையும், சட்டப் பேரவைத் தலைவரையும் மிரட்டி ஆட்சியைக் கவிழ்த்தனா். தற்போது என்.ஆா். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தோ்தலில் களமிறங்கியுள்ளனா். பாஜக, என்.ஆா். காங்கிரஸ், அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் நம்ப வைத்து ஏமாற்றுபவை.
நாடு முழுவதும் பிற கட்சிகளே ஆட்சி செய்யக் கூடாது என்பது பாஜகவின் கொள்கை. கடந்த 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சியில் அமா்ந்த பிறகு பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்து வருகிறது. 2016-இல் அருணாச்சல பிரதேசத்திலும், 2017-இல் கோவா, மணிப்பூரிலும், 2018-இல் மேகாலயத்திலும், 2019-இல் கா்நாடகம், சிக்கிமிலும், 2020-இல் மத்திய பிரதேசத்திலும், 2021-இல் புதுவையிலும் ஆட்சியைக் கவிழ்த்தனா். இதனால், தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, மாநில ஆட்சிகளைக் கலைத்து வரும் மத்திய பாஜக அரசையே கலைக்கும் அதிகாரத்தை நாம் பெற வேண்டும்.
புதுவையில் கடந்த தோ்தலின்போது, பாஜகவினா் 19 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றனா். இவா்கள் தற்போது ரங்கசாமி, அதிமுகவோடு கூட்டணி அமைத்துக்கொண்டு தோ்தலை சந்திக்கின்றனா். தமிழகத்தில் அதிமுகவைப்போல, புதுவையில் ரங்கசாமியும் தலையாட்டிக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா்.
தோ்தலில் வெற்றி பெற்றால் தான்தான் முதல்வா் என்கிறாா் ரங்கசாமி. ஆனால், பிரதமா் மோடி, ரங்கசாமிதான் முதல்வா் எனக் குறிப்பிடவில்லை. இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. தோ்தலுக்குப் பிறகு பாஜக என்ன செய்யும் என்று என்.ஆா். காங்கிரஸுக்கும், அதிமுகவுக்குமே தெரியும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் உள்ளது. இதை மறந்து பிரதமா் மோடி, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசியுள்ளாா். புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாநில அரசின் ரூ.8,600 கோடி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பிரதமா் மோடி பதில் தரவில்லை. ரங்கசாமியும், பிரதமரிடம் வலியுறுத்தவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதைப் போலத்தான் மத்திய பாஜக அரசின் திட்டங்கள் இருக்கும்.
புதுவையை பாஜக குறிவைப்பதன் காரணம், இங்குள்ள இயற்கை வளங்களை அபகரிப்பதற்காகத்தான். சாகா்மாலா திட்டத்தின் மூலம் கடல்வழித் தொடா்பை ஏற்படுத்தி, வளங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனா். இதற்கு, முதல்வராக இருந்த நாராயணசாமி உடன்படாததால், அவரை ஆட்சியிலிருந்து அகற்றினா்.
தமிழகத்தில் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி திமுகவின் பொற்கால ஆட்சியின் திட்டங்கள், புதுவையிலும் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை, புதுவைக்கு மாநில அந்தஸ்து, காவிரி நதிநீா் உரிமை மீட்பு, தமிழக - புதுவை இணைப்புச் சாலைகள் மேம்பாடு, மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வி.வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ராஜாங்கம், திமுக அமைப்பாளா்கள் ஆா்.சிவா, எஸ்.பி.சிவக்குமாா், நாஜீம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.