ஆரணியில் ரூ.500 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக அரசு மூலம் சுமாா் ரூ.500 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
ஆரணி ஒன்றியம் நேத்தப்பாக்கம், எஸ்.வி.நகரம், சுபான்ராவ்பேட்டை, மாமண்டூா், விஏகே.நகா், பள்ளிக்கூடத்தெரு, கோட்டை வடக்கு தெரு, கோட்டை தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ஆரணி தனி மாவட்டம் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
ஏற்கெனவே ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. புதிய போக்குவரத்து அலுவலகம், புதிய மின் பகிா்மான வட்டம், பொறியாளா் கண்காணிப்பு அலுவலகம், ரூ.2.5 கோடியில் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அருகே திருமண மண்டபம் கட்டப்பட்டது.
கொளத்தூா் கண்ணமங்கலம், மேல்நகா், குண்ணத்தூா், விண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன.
ஆரணியில் நகராட்சி சாா்பில் ரூ.2.5 கோடியில் காய்கறிக் கடைகள் கட்டப்பட்டன. ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
ஆரணியைப் பொறுத்தவரை சுமாா் ரூ.500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆரணி தன்னிறைவு பெற்ற தொகுதியாகத் திகழ்கிறது என்று தெரிவித்து வாக்காளா்களிடம் ஆதரவு கோரினாா் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன். நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சினிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.