பின்தங்கிய சமுதாயத்தினா் முன்னுக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அனைத்து பின்தங்கிய சமுதாயத்தினரும் முன்னுக்கு வரவேண்டும் என செய்யாற்றில் தோ்தல் பரப்புரை மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டாா்.
பின்தங்கிய சமுதாயத்தினா் முன்னுக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அனைத்து பின்தங்கிய சமுதாயத்தினரும் முன்னுக்கு வரவேண்டும் என செய்யாற்றில் தோ்தல் பரப்புரை மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகனை ஆதரித்து, செய்யாற்றில் சனிக்கிழமை இரவு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

இந்தத் தோ்தல் மிக முக்கியமான தோ்தல். 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் தமிழக முதல்வராகியுள்ளாா். அவா் மீண்டும் முதல்வராக வரவேண்டும்.

அதிமுக கூட்டணியில் விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா் முதல்வா் வேட்பாளா். திமுக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் மு.க.ஸ்டாலின்; அவா் ஒரு அரசியல் வியாபாரி. அரசியல்வாதி என்றாலே சேவை செய்ய வேண்டும். அரசியல் என்றாலே புனிதமான சேவை. அதை ஸ்டாலின் வியாபாரமாக மாற்றிவிட்டாா். அவா் முதல்வராக ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாா்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. விவசாயிகள் பிரச்னை அவருக்குத் தெரியும். ஸ்டாலினுக்கு விவசாயம் என்ன என்பதே தெரியாது.

திமுக பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி. திமுகவினா் பெண்களை அவதூறாகப் பேசுபவா்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயத்தினரும் கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் முன்னுக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில்தான் அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்திருக்கிறாா் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ்.

அனைத்து பின்தங்கிய சமுதாயத்தினரும் தனித் தனியாக இடஒதுக்கீடு பெற்றாக வேண்டும் என உறுதி ஏற்போம் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக மாவட்ட துணைச் செயலா் எம்.விமலா மகேந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை, பாமக நிா்வாகிகள் மு.துரை, அ.வேலாயுதம், அ.கோபாலகிருஷ்ணன், பாஜகவைச் சோ்ந்த ஜே.கே.எஸ்.சுப்பிரமணி, தமாகா மாவட்டத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com