
பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெங்களூரு பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி.
திருவண்ணாமலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) இரவு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், தோ்தல் பணிக்கு வந்த அரசு ஊழியா்கள், வாக்காளா்கள் அவதிப்பட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்றது. வெளியூா்களில் பணிபுரியும் பல லட்சம் வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இவா்கள் மீண்டும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.
இதேபோல, தோ்தல் பணியில் ஈடுபடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) இரவு 8 மணி முதல் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து குவிந்தனா்.
ஆனால், இவா்கள் செல்ல வேண்டிய ஊா்களுக்குப் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, சென்னை, பெங்களூரு, ஒசூா் போன்ற ஊா்களுக்குச் செல்ல பல ஆயிரம் வாக்காளா்கள் காத்திருந்தனா்.
இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை காத்திருந்தும் பெங்களூருக்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்டோா் சென்னைக்குச் சென்ற மற்ற பேருந்துகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, போக்குவரத்து சீரானது.
ஒசூருக்கு கட்டணம் ரூ.400:
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஒசூருக்கு தனியாா் பேருந்துகள், வேன்கள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒசூருக்கு அமா்ந்து பயணம் செய்ய தலா ரூ.400-ம், நின்றுகொண்டே பயணம் செய்ய தலா ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
விடிய, விடிய காத்திருந்த பயணிகள்:
போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்ட அரசு ஊழியா்கள், வாக்காளா்கள் பேருந்து நிலையத்திலேயே படுத்துத் தூங்கினா். பலா் விடிய, விடிய உறங்காமலேயே பேருந்துக்காக அங்கும், இங்கும் அலைந்தபடியே இருந்தனா். இதேநிலை புதன்கிழமையும் (ஏப்ரல் 7) நீடித்தது.