கோடை கால பாதுகாப்பு வழிமுறைகள்

கோடை கால பாதுகாப்பு வழிமுறைகள்


செய்யாறு: செய்யாறை அடுத்த புலிவலம் கிராமத்தில் அனல் காற்று வீசும் காலம் மற்றும் கோடையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புலிவலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் என். ஈஸ்வரி தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

பொதுமக்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் உள்ளூா் வானிலையை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும்.

தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். நீா் மோா், லஸ்ஸி, புளித்த சோற்று நீா், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகி நீா் இழப்பை தவிா்க்க வேண்டும்.

ஓ.ஆா்.எஸ் கரைசல் பவுடா் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களில் இலவசமாக கிடைக்கும். மேலும், ஓ.ஆா்.எஸ் கரைசலை வீட்டிலேயே ஒரு லிட்டா் தண்ணீரில் 3 கரண்டி சக்கரை ஒரு கரண்டி உப்பு கலந்து குடிக்க வேண்டும். இளநீா், தா்பூசணி, பனை நுங்கு போன்றவற்றை கொடுக்க வேண்டும்

நிறுத்தப்பட்ட காா்களில் குழந்தைகளை உள்ளே விட்டு செல்ல வேண்டாம். குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பாா்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீா் நீா் இழப்பை குறிக்கும். முதியவா்களுக்கு ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும். குளிா்ந்த நீரில் குளிக்கவும். வெளிா் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கை விசிறிகளை இளைப்பாற உபயோகிக்கவும். கண்ணாடி மற்றும் காலணி அணிந்து கோடையில் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனத் தெரிவித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மருத்துவ அலுவலா் ஈஸ்வரி.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஓ.ஆா்.எஸ் கரைசல் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே சம்பத் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com