வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 27th April 2021 12:00 AM | Last Updated : 27th April 2021 12:00 AM | அ+அ அ- |

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்.
செய்யாறு: செய்யாறு தொகுதி வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
செய்யாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந.விஜயராஜ் தலைமை வகித்தாா். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்கு குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். அனைவரும் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னா், ஒரு சுற்றுக்கு 14 மேஜை அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடா்ந்து நடைபெறும்.
பணியாளா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளா்கள் 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்து கொண்டு அதற்கான சான்றிதழுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், வாக்கு எண்ணும் அலுவலருக்கான சந்தேகங்களை உதவி தோ்தல் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா்கள் செய்யாறு சு.திருமலை, வெம்பாக்கம் குமாரவேலு, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ்சந்தா் மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.