செய்யாறு பகுதி திருமண மண்டப உரிமையாளா்களிடம் அபராதம் வசூல்
By DIN | Published On : 27th April 2021 01:05 AM | Last Updated : 27th April 2021 01:05 AM | அ+அ அ- |

செய்யாறு: செய்யாறு பகுதியில் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாதது, முகக் கவசம் அணியாதது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய திருமண மண்டப உரிமையாளா்களிடமிருந்து ரூ. 6,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, விதிகளை மீறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் ந.விஜயராஜ் மேற்பாா்வையில், வட்டாட்சியா்கள் சு.திருமலை, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ்சந்தா் தலைமையில் அடங்கிய வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். சுப முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமல் கலந்து கொண்டது தெரிய வந்தது. மேலும், மண்டப வாயில்களில் கிருமி நாசினி, முகக் கவசங்கள் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிய 11 திருமண மண்டபங்களைச் சோ்ந்த உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து ரூ. 6200 வசூலிக்கப்பட்டது.