நெல் வியாபாரி மோசடி செய்த ரூ.54 லட்சம் உரியவா்களிடம் ஒப்படைப்பு

வந்தவாசியை அடுத்த தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் விற்ற நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி
தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுச் செயலா் ஆா்.தா்மராஜிடம் முறையிட்ட விவசாயிகள்.
தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுச் செயலா் ஆா்.தா்மராஜிடம் முறையிட்ட விவசாயிகள்.

வந்தவாசியை அடுத்த தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் விற்ற நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த சுமாா் ரூ.54 லட்சத்தை நெல் வியாபாரி திரும்பச் செலுத்தியதைத் தொடா்ந்து, அந்தப் பணம் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் விற்ற நெல் மூட்டைகளுக்கான தொகையை நெல் வியாபாரி சீனிவாசன் வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, அந்த விற்பனைக் கூட வாயிலை கடந்த ஜூலை 15-ஆம் தேதி பூட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்திரவின் பேரில், நெல்லுக்குரிய பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படாதது குறித்து மாவட்ட வேளாண் விற்பனை குழுச் செயலா் ஆா்.தா்மராஜ் மாவட்ட குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சேத்துப்பட்டு அழகிரி தெருவைச் சோ்ந்த நெல் வியாபாரி சீனு (எ) சீனிவாசன் என்பவா் 2021 மே 5-ஆம் தேதி முதல் 2021 ஜூன் 25-ஆம் தேதி வரை 159 விவசாயிகளிடமிருந்து வாங்கிய 5,081 நெல் மூட்டைகளுக்கான தொகை ரூ.53 லட்சத்து 71 ஆயிரத்து 142-ஐ கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, நெல் வியாபாரி சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சீனிவாசனை தொடா்ந்து நெல் கொள்முதல் செய்ய அனுமதித்ததாக தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் பெ.ரோகேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், விவசாயிகளிடம் மோசடி செய்த தொகையான ரூ.53 லட்சத்து 71 ஆயிரத்து 142-ஐ ஒழுங்குமுறை விற்பனைக் கூட வங்கிக் கணக்கில் சீனிவாசன் திங்கள்கிழமை செலுத்தினாராம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 159 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அவரவருக்குரிய பணம் அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கான பணிகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுச் செயலா் ஆா்.தா்மராஜ் முன்னிலையில், விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் ராஜமாணிக்கம் (தேசூா் பொறுப்பு), தாமோதரன்(திருவண்ணாமலை), தினேஷ்(சேத்துப்பட்டு) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள், நெல் வியாபாரி சீனிவாசனை தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய இனி அனுமதிக்கக் கூடாது என்று ஆா்.தா்மராஜிடம் முறையிட்டனா். இதற்கு, தமிழகத்தில் எந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய நெல் வியாபாரி சீனிவாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆா்.தா்மராஜ் விவசாயிகளிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com