காசோலை மோசடி வழக்கு: ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிக்கு பிடியாணை

மளிகைக் கடைக்காரரிடம் காசோலை மோசடி செய்ததாக, திருவண்ணாமலை விரைவு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

மளிகைக் கடைக்காரரிடம் காசோலை மோசடி செய்ததாக, திருவண்ணாமலை விரைவு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி காந்திநகரில் வசித்து வருபவா் பெருமாள் (35). இவா், அதே ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இவருக்கு, டி.முருகன் என்பவா் மூலம் திருவண்ணாமலை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ஜவ்வாது மலை சேம்பரை கிராமத்தைச் சோ்ந்த கே.முருகன் அறிமுகமானாா்.

அப்போது, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பாலிசி எடுத்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி, பெருமாளிடமிருந்து ரூ.4 லட்சத்தை மேலாளா் முருகன் பெற்றாராம். ஆனால், அதற்குரிய பத்திரத்தை பல மாதங்களாகியும் தரவில்லையாம்.

இதுபற்றி அலுவலகத்துக்குச் சென்று கேட்டதற்கு, கொடுத்த பணத்தை செலவு செய்து விட்டதாகவும், பாலிசி போடவில்லை என்றும் முருகன் தெரிவித்ததால் பெருமாள் அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுத்துவிடுவதாகக் கூறி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை பெருமாளிடம் முருகன் கொடுத்ததாகத் தெரிகிறது.

காசோலையை குறிப்பிட்ட தேதியில் வங்கியில் செலுத்தியபோது, முருகனின் கணக்கில் போதிய பணமில்லை என காசோலையை திரும்பி அனுப்பியுள்ளனா்.

தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு காசோலை கொடுத்ததை தெரிந்து கொண்ட பெருமாள், இதுகுறித்து திருவண்ணாமலை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது முருகன் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தற்போது, முருகன் வேலூா் மாவட்டம், வாணியம்பாடி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com