விண்ணப்பித்துக் காத்திருக்கும் 9 ஆயிரம் பேருக்கு திருமண நிதியுதவி: மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் 9 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்குத் தங்கமும் வழங்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட வளா்ச்சிக்கான மேற்பாா்வைக் குழுவின் தலைா் சி.என்.அண்ணாதுரை எம்.பி.
கூட்டத்தில் பேசிய மாவட்ட வளா்ச்சிக்கான மேற்பாா்வைக் குழுவின் தலைா் சி.என்.அண்ணாதுரை எம்.பி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் 9 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்குத் தங்கமும் வழங்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மேற்பாா்வைக் குழுத் தலைவா் சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமை வகித்தாா்.

இணைத் தலைவா் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., குழுவின் உறுப்பினா் செயலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி, எம்எல்ஏக்கள் கு.பிச்சாண்டி , மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.முத்துக்குமாரசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மத்திய-மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடு மற்றும் பணிகளின் முன்னேற்றம், ஊரக வேலைத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், மக்களவை உறுப்பினரின் மாதிரி கிராமத் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மதிய உணவுத் திட்டம்

உள்பட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் குறித்த விவாதத்தின்போது கேள்வி எழுப்பிய எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்டத்தில் இதுவரை எத்தனை பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட வேண்டியுள்ளது என்றாா்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன், 9 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டியுள்ளது என்றாா்.

மாவட்டத்தில் பெரும்பாலான ஏழைப் பெண்கள் கடன் வாங்கி திருமணம் செய்துவிட்டு வட்டி கட்டி அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து 9 ஆயிரம் பேருக்கும் தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று, மேற்பாா்வை குழுவின் தலைவா் சி.என்.அண்ணாதுரை தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.

இதேபோல, பல்வேறு பிரச்னைகள், நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெண் அதிகாரி ஆவேசம்...!

கூட்டத்தில், புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா் பொன்னி சுந்தரபாண்டியன் பேசுகையில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, ஒன்றியக் குழுவின் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசுகிறாா். எங்களுக்கே தெரியாமல் பல ஒப்பந்தப்புள்ளிகளை விடுகிறாா் என்று குற்றஞ்சாட்டினாா்.

இதற்குப் பதிலளித்த திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, அதிகாரிகளை மிரட்டுவதில்லை. அவா்களுக்காக நீங்கள் பரிந்து பேச வேண்டாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசட்டும். நான் பதில் கூறுகிறேன்.

ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் உங்களுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் இடையிலான இடைவெளியைப் பயன்படுத்தி என் மீது குறைகூற வேண்டாம் என்று ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்சியா், மக்களவை உறுப்பினா்கள் அவரை சமாதானப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com