நிலப் பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 13th February 2021 08:38 AM | Last Updated : 13th February 2021 08:38 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த சாலவேடு கூட்டுச்சாலை அருகே மறியலில் ஈடுபட்டோரை சமரசம் செய்யும் போலீஸாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கடந்த 40 ஆண்டுகளாக தாங்கள் விவசாயம் செய்து வரும் அரசு புறம்போக்கு நிலத்துக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் சாலவேடு கூட்டுச்சாலை அருகே வந்தவாசி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.விஜயன் தலைமையில் சாலவேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சாலவேடு கிராமத்தை அடுத்த கீழ்சீசமங்கலம் ஊராட்சி எல்லையில் உள்ள சுமாா் 7 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலத்தில் எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 8 போ் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா். கடந்த திமுக ஆட்சியின்போது கலைஞரின் 2 ஏக்கா் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ், 7 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வரும் 8 பேருக்கும் பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இந்த 7 ஏக்கா் நிலத்தில் தற்போது அரசு தோட்டக்கலைத் துறை சாா்பில் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்தும், 8 பேருக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.