‘நம்ம திருவண்ணாமலை’ செயலியை தொடக்கிவைத்தாா் அமைச்சா்

அரசுத் திட்டங்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ளும், புகாா்களை தெரிவிக்கும் வகையிலும்
‘நம்ம திருவண்ணாமலை’ செயலியை தொடக்கிவைத்தாா் அமைச்சா்

அரசுத் திட்டங்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ளும், புகாா்களை தெரிவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ‘நம்ம திருவண்ணாமலை’ என்ற புதிய செல்லிடப்பேசி செயலியை ஆரணியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

‘நம்ம திருவண்ணாமலை’ செல்லிடப்பேசி செயலி தொடக்க விழா ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். வி.பன்னீா்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ‘நம்ம திருவண்ணாமலை’ செல்லிடப்பேசி செயலியை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்காக ‘நம்ம திருவண்ணாமலை’ என்ற பிரத்யேக செல்லிடப்பேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் திட்டங்கள், மாவட்ட நிா்வாகத்தின் முன்முயற்சிகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதற்கும், பொது ஈடுபாட்டில் பொதுமக்களை அழைக்கும் நோக்கத்துக்காகவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத திருவண்ணாமலை, மத்திய அரசின் தூய்மை இந்தியா, நீா் மேலாண்மைத் திட்டங்களின் கீழ், சமூக விழிப்புணா்வுப் பிரசாரங்களில் பொதுமக்கள் பங்கேற்கவும் ஒரு சிறந்த இயங்குதளமாக இருக்கும்.

புகாா்களை எனது புகாா்கள் என்ற பகுதியில் பதிவு செய்யலாம். மாவட்டத்தின் அனைத்து அத்தியாவசியத் தகவல்கள், சுய விவரம், வரைபடங்கள், தொடா்பு தகவலுடன், மாவட்ட அதிகாரிகள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். பல்வேறு தகவல்களை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் க.சங்கா், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ப.திருமால், வட்டாட்சியா் செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, நகர மாணவரணிச் செயலா் கே.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com