கண்ணமங்கலத்தில் 120 கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் சரக டிஐஜி தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 16th January 2021 11:04 PM | Last Updated : 16th January 2021 11:04 PM | அ+அ அ- |

கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை தொடக்கிவைத்து பாா்வையிட்ட வேலூா் சரக டிஐஜி காமினி.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 120 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் இயக்கத்தை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வேலூா் சரக டிஐஜி காமினி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் தலைமை வகித்தாா். கூடுதல் எஸ்.பி. அசோக்குமாா், ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன், கண்ணமங்கலம் ஆய்வாளா் விநாயகமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் வேலூா் சரக டிஐஜி காமினி பேசியதாவது:
தமிழகத்திலேயே முதல்முறையாக 120 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றச் செயல்களை கண்காணிக்கும் ஒரே காவல் நிலையம் கண்ணமங்கலம் காவல் நிலையம் என்பதில் பெருமையடைகிறேன். இவற்றை அன்பளிப்பாக அளித்து உதவிய ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், தொழிலதிபா்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இனி இந்தப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், ஆரணி, சந்தவாசல் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் குறைவாக உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் அதிகரிப்படவுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் போளூா் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி, மேற்குஆரணி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், முக்கியப் பிரமுகா்கள் சரவணன், கோவா்த்தனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.