மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவை துணைத் தலைவா் ஆய்வு
By DIN | Published On : 13th July 2021 12:08 AM | Last Updated : 13th July 2021 12:08 AM | அ+அ அ- |

மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி திங்கள்கிழமை (ஜூலை 12) ஆய்வு செய்தாா்.
இந்தத் தொகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரிடம் பொதுமக்கள் கொடுத்தனா்.
இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமியிடம் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திங்கள்கிழமை (ஜூலை 12) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்தாா் (படம்). அப்போது, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமிக்கு பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உத்தரவிட்டாா்.